கடந்த 27 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில்தான் அரசு நிறுவனங்களின் சொத்துகள் விற்பனை அதிகரிப்பு

கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், பங்குகள் விற்கப்பட்டதைக் (disinvestment ) காட்டிலும், கடந்த 4 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரசு நிறுவனங்களின் பங்குகள் விற்பனையானதுதான் அதிகம் என்று ‘தி இந்து’ (ஆங்கிலம்) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து ரூ.3.91 லட்சம் கோடி மதிப்பிலான அரசு நிறுவனங்களின் பங்குகள், சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.2.91 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள், கடந்த 4 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் விற்கப்பட்டவையாகும் என்று அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மையின் (டிஐபிஏஎம்) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முடிய 5 மாதங்கள் இருக்கும் நிலையில், இதன் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலத்தில் அரசின் நிறுவனங்கள், பங்குகள் விற்பனை செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் விற்பனை செய்யப்பட்ட அரசின் பங்குகள் அளவு இரு மடங்காகும்.
நடப்பு நிதிஆண்டில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்புக்கு அரசு நிறுவனங்களின் பங்குகளை சந்தையில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.15 ஆயிரத்து 247.11 கோடிக்கு பங்குகள் விற்பனை செய்யப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி மத்திய அரசு இந்த ஆண்டு இலக்கை அடைந்துவிட்டால் ஏறக்குறைய கடந்த 27 ஆண்டுகளில் அரசின் சொத்துகளை, பங்குகளை விற்பனை செய்த மதிப்பில் 65 சதவீதம் பாஜக ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
அரசு நிறுவனங்களின் பங்குகளை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் கடந்த ஆண்டில் ரூ.72 ஆயிரம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் ரூ. ஒரு லட்சத்து 56 கோடி திரட்டியது.
இதுகுறித்து அரசுடன் நெருக்கமாகப் பணிபுரிந்துவரும் ஒரு பொருளாதார வல்லுநர் கூறுகையில், ”அரசு நிறுவனங்களின் சொத்துகள், பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் அரசு தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை அடையப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. பெரும்பாலான நஷ்டத்தில் செயல்படும் அரசு நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதை நிலை தொடர்ந்தால் அது சிக்கலாகவும் மாறக்கூடும்.
உதாரணமாக ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.36 ஆயிரம் கோடிக்கு எச்பிபிஎல் நிறுவனத்தின் பங்குகளை அரசிடம் இருந்து வாங்கியது. இது எப்படி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை என்று சொல்ல முடியும். ஓஎன்ஜிசி நிறுவனமும் அரசு நிறுவனம்தான” எனத் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய புள்ளியியல் துறையின் முன்னாள் தலைவர் பிரானாப் சென் கூறுகையில், ”பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்தால், நிறுவனங்களின் மதிப்பு குறைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

अन्य समाचार

मुख्य समाचार

उपर